மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ தேர்தலை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி எடுத்துக்கொண்டால் அடுத்த தேர்தலே இருக்காது என பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி நடக்காது என நான் சொல்கிறேன். தேர்தல் நடக்கும் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரே ஒரு பட்டன் தான் இருக்கும், ஒரே ஒரு வேட்பாளர் தான் இருப்பார். அதுவும் அந்த பட்டன் மேல் ஹிந்தியில் எழுதியிருக்கும்.
ஒரே நாடு, கேட்க நன்றாக இருந்தாலும், ஒரே நிறம் என்பது சற்று பயமாக உள்ளது. எங்களுக்கு மூன்று நிறங்கள் பழகி போய்விட்டது. நாயகன் படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது. ’திருப்பி அடிச்சா தான் அடியிலிருந்து தப்ப முடியும்’ ஆனால் இது ஜனநாயக நாடு. இதனை புரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்கிறார். ஏழ்மையை ஓட ஓட விரட்டுகிறார். இதெல்லாம் செய்தே ஆக வேண்டும். அவருடைய மகன் (உதயநிதி ஸ்டாலின்) இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்.
மண்ணாங்கட்டி இதெல்லாம் என்ன திராவிட மாடல் என சொன்னவர்களுக்கு தற்போது பயம் ஏற்பட்டுள்ளது. இதனை காப்பி அடிக்க வேண்டிய மாடலாக மாறியுள்ளது. ஒரு ஆளுக்கு 1000 கோடி ரூபாய் கொடுப்பது தான் மத்தியில் இருக்கும் ஆட்சி, பல கோடி பேருக்கு 1000 ரூபாய் கொடுப்பது தான் இங்கு இருக்கும் மாடல். அங்கு பாலம் இடிந்து விழுந்துக்கொண்டிருக்கிறது, இங்கு பஸ் கட்டனங்கள் இல்லாமல் இருக்கும் நிலை கொண்டு வரப்படுகிறது. இதில் பல கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர்.
இங்கு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் கட்டுமானத்திற்கு ரூ.68,000 கோடி செலவாகும். பாதி நாங்கள் தருகிறோம், மீதி நீங்கள் கொடுங்கள் என்று ஒப்பந்தம் போட்ட பின் அது பின்பற்றவில்லை. ஆகையால் அப்பாவின் வழியில் (கலைஞர் கருணாநிதி) ரூ.68,000 கோடியும் மாநில அரசே கொடுத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உங்களுக்கு எந்த அரசு வேண்டும்?
சாப்பாடும் போட்டி படிக்க வைக்கும் இந்த அரசா, இல்லை இவர்கள் படித்து முன்னேறி விடுவார்கள் என நினைத்து குறுக்கே தேர்வை வைக்கும் அரசா? மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு இல்லை, மக்களோடு ஒன்றாத அரசு. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் இந்த அரசு வேண்டுமா? விவசாயிகள் நியாயம் கேட்டுவிடுவார்கள் என ஆணிப்படுக்கை விரிக்கும் ஒன்றாத அரசு வேண்டுமா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சொல்லும் அரசு வேண்டுமா? ஜனாதிபதியாக இருந்தாலுமே கொஞ்சம் தள்ளி இருங்கள் என சொல்லும் அரசா? இப்படியே இருந்தால் வட கொரியா போல் மாறிவிடும். அப்படி மனதில் சிப் வைத்து வேவு பார்க்கும் அரசாக மாறிவிடும். இந்த தேர்தலை சாதரண்மாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு புரட்சியாக எடுத்துக்கொண்டு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் காண