DMDK Premalatha Vijayakanth try to raise on captain vijayakanth


Premalatha Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கடைசியாக அவரது டயலாக் சொல்லி பிரமீட்டை முடித்துக் கொண்டார். 
 
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது மறைவால் வாடிய தமிழ் திரையுலகினர் விஜயகாந்தின் அன்னமிட்ட கரங்கள் குறித்து பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த படக்குழுவில் யாரும் பசியோடு இருக்க முடியாது. அவர் என்ன உணவு சாப்பிடுகிறாரோ அதை தான் படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்க செய்துள்ளார். 
 
திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள் மட்டுமில்லாமல், ராவுத்தர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய விஜயகாந்த், திரைப்பட வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் 3 வேளைக்கு உணவு வழங்கி வந்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் மட்டுமில்லாமல் தேமுதிக என்ற கட்சி அலுவலகத்தை தொடங்கிய அவர், அங்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் உணவு வழங்கி வந்துள்ளார். கட்சி ரீதியாகவோ அல்லது திரைத்துறை சார்பாகவோ தன்னை சந்திக்க வருவோரை முதலில் பார்த்து விஜயகாந்த் கேட்கும் கேள்வி சாப்பிட்டீர்களா..? என்பது தான். 
 
தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களையும் முதலில் சாப்பிட்டீர்களா என்று கேட்பதை விஜயகாந்த் வழக்கமாக கொண்டிருந்தார். அவரின் இந்த ஈகை குணம் தான் அவரது மறைவுக்கு பிறகு ஒவ்வொருவரையும் கண்ணீர் சிந்த வைத்தது. 
 
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிக அலுவலகத்தில் தினமும் விஜயகாந்த் குடும்பத்தார் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கட்சி அலுவலகத்திற்கு யார் என்றாலும் பாராபட்சமின்றி சாப்பாடு போடப்பட்டு வருகிறது.
 
இந்த சூழலில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிக கட்சியை அவரது மனைவி பிரேமலதா வழி நடத்தி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா தேர்தல் கூட்டணி குறித்து விளக்கம் அளித்தார். 
 
செய்தியாளர் சந்திப்பு நிறைவுபெற்றதும் அனைவரும் கலைந்து செல்ல முயன்றனர். அப்போது, இறுதியாக பேசிய பிரேமலதா, “சாப்பிட்டீங்களா எல்லாரும். எல்லாரும் சாப்பிட வேண்டும். இங்க வந்தால் அனைவரும் சாப்பிட வேண்டும் என்பது தான் கேப்டன் எண்ணம். அதை தான் நானும் சொல்கிறேன். இங்கு வரும்போது அனைத்து பத்திரிகையாளர்களும் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கனும்” என்றார். இப்படி பத்திகையாளர் சந்திப்பு முடிந்ததும், எல்லாரும் சாப்பிட்டீங்களா என்று விஜயகாந்தை பிரதிபலிக்கும் விதமாக பிரேமலதா பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
 

மேலும் காண

Source link