நாம் தமிழர் கட்சிக்கு, மக்களவை தேர்தலில், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு புதுவிளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் The Greatest of All Time படத்தில் நடித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் யுவன் இசையில் விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் முழுக்க முழுக்க விஜய் அரசியல் வருகையை வைத்து வரிகள் எழுதப்பட்டுள்ளது. பாடல் இப்போது பேசுபொருளாக உள்ள நிலையில் இந்த பாடல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “இந்த மக்களவை தேர்தலில் பிற தேர்தல்களை விட இளைஞர்கள், படித்தவர்களை காட்டிலும் பெரியவர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் உள்ளது. 50 வயதை கடந்தவர்களின் ஆதரவு அபரிமிதமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமான ஆதரவை கொடுத்திருக்கிறார் என சொல்லலாம்.
அவர் நடித்துள்ள கோட் படத்தின் பாடல் வெளியாகியிருக்கிறது. அதில் வந்து campaign தொடங்கி மைக்கைப்பிடி என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியில் மைக்கை வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மறைமுக ஆதரவு தருவதாகத்தான் பார்க்கிறோம். நேரடியாக அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. மைக்கை வைத்தால் அது நாம் தமிழர் கட்சியைத்தான் சென்றடையும் என விஜய்க்கு தெரியும்.
இதுகுறித்து விஜய்யின், “தவெக” கட்சி எந்தவிதமான பதிலையும், உறுதியையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் மற்றும் விஜய்யின் கொள்கைகளிலும் பெரிய அளவில் வேறுபாடில்லை. நாங்களும் அடிப்படை அரசியல் மாற்றம் என சொன்னோம். விஜய் வெளியிட்ட அறிக்கையிலும் அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம் என சொல்லியிருக்கிறார். இரண்டு கட்சிகளிலும் பெரிய அளவில் மாறுபாடில்லை. இனி விஜய் எடுத்து வைக்கப்போகிற பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளிலும் தான் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுத்து போகிறார் என தெரிய வரும்.
நாம் தமிழர் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இப்போது வரை எந்தவித முரண்பாடும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக திகழக்கூடியவர், ரூ.150 கோடி சம்பளம் பெறுபவர், இந்தியா முழுக்க தெரிந்த பான் இந்தியா ஸ்டாராக இருப்பவர் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். 2026ல் இரண்டு கட்சிகளும் இணைவதற்கான பல கட்ட பேச்சுவார்த்தைகள் போய் கொண்டு இருக்கிறது. ஒருவேளை தனித்தனியாக நின்றாலும் கூட கொள்கை ஒரே பாதையில் நிற்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் காண