electoral bonds worth rupees 16000 cr sold since its inception bjp gets maximum share | Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் – ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை


Electoral Bonds: தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, பாஜக மட்டும் இதுவரை 6000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து:
கறுப்பு பணம் ஒழியும் என மத்தியில் ஆளும் பாஜக தலைமயிலான அரசால், கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நிதி பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பாஜகவிற்கு எவ்வளவு நிதி?
முந்தைய நிதியாண்டு வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாக ரூ.12,000 கோடிக்கு மேல் நிதியை பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான தொகுதியை பாஜக எனும் ஒற்றை கட்சி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) தரவுகள் அடிப்படையில், தேர்தல் பத்திரங்கள் மூலமான நிதியில் ஆளும் பாஜக  55 சதவிகித நிதியை பெற்றுள்ளது. அதாவது சுமார் 6,565 கோடி ரூபாயை நிதியாக பெற்றுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கட்சி வாரியான தரவு பின்னர் கிடைக்கும். மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கிடைத்த மொத்த நிதி ரூ.16,518.11 கோடி என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.  இந்த பத்திரங்கள் கட்சிகளால் பெறப்பட்ட மொத்த நிதி பங்களிப்புகளில் பாதிக்கும் மேலானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில மாநிலக் கட்சிகள் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நிதியை  தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. பாஜகவும் அதன் வருமானத்தில் பாதிக்கும் மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.
கட்சிகளுக்கான நிதி:
நாட்டின் பணக்கார கட்சியாக இருந்த காங்கிரஸ் அந்த இடத்தை தற்போது பாஜகவிடம் இழந்துள்ளது. அதாவது  2013-14-ஆம் ஆண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 598 கோடியாக இருந்த நிலையில், பாஜகவின் வருவாய் ரூ. 673.8 கோடியாக உயர்ந்தது. இதன் பிறகு காங்கிரசின் நிதி என்பது தொடர்ந்து சரிந்து வருகிறது. 2017-18ல் ரூ.1,027 கோடி வருவாயாக பெற்ற பாஜக, தேர்தல் பத்திரங்கள் அமலுக்கு வந்த 2018- 19-ஆம் ஆண்டில் ரூ. 2,410 கோடியை வருவாயாக பெற்றது. இதே காலகட்டத்தில் காங்கிரஸின் வருவாய் முறையே ரூ. 199 மற்றும் ரூ. 918-ஆக பதிவானது.  2021-22 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு ரூ.1,033 கோடியும்,  காங்கிரசுக்கு ரூ. 236 கோடி கிடைத்தது. 2022-23- ஆம் ஆண்டில் பாஜகவின் மொத்த வருவாய் ரூ. 2,360 கோடி. இதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,300 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரசுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 171 கோடி உட்பட மொத்த வருவாயாக ரூ. 452 கோடி கிடைத்தது.  2022-23-ஆம் நிதியாண்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.325 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ரூ. 529 கோடியும், திமுகவுக்கு ரூ. 185 கோடியும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 152 கோடியும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.34 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளது. மாநில கட்சிகளில் அதிக நிதி பெற்ற கட்சியாக திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவிற்கு வாரி வழங்கிய கார்ப்ரேட் நிறுவனங்கள்:
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக சட்டங்களை இயற்ற அரசை வலியுறுத்த வாய்ப்புள்ளதாக கூறி தான், தேர்தல் பத்திரங்கள் சட்டத்தையே உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டில் மொத்தமாக 680 கோடி ரூபாய் கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதியாக பெற்றுள்ளன. அதில் 90 சதவிகிதம் அதாவது 610 கோடி ரூபாயை பாஜக தான் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் 55 கோடி ரூபாயை கார்ப்ரேட் நிதியாக பெற்றுள்ளது.
 

மேலும் காண

Source link