கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று, அமலாகக்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அனுப்பிய சம்மன்களை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் டெல்லியை சேர்ந்த 3 அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். சட்டவிரோதமாக நிலம் வாங்குவதில் மோசடி நடைபெற்றுள்ளதாக, எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

#WATCH | A team of ED officials arrives at the residence of Jharkhand CM Hemant Soren in Ranchi in land scam case. pic.twitter.com/WJrojsddDZ
— ANI (@ANI) January 20, 2024

அமலாக்கத்துறை அனுப்பிய 8 சம்மன்கள்:
நில மோசடி வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பியது. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளே, அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள பாஜக தரப்பு, “ ஏழாவது சம்மன் வரை தன்னை பாலில் கழுவிய சுத்தமான நபர் என கூறி வந்த ஹேமந்த் சோரனின் ஆணவம்,  எட்டாவது சம்மனில் மறைந்தது” என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், “பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது.  இதற்கு முன்பே  ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது” என தெரிவித்துள்ளது.
14 பேர் கைது:
நில மோசடி வழக்கு தொடர்பாக சோரனுக்கு 2023 ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது.  ஆனால், மாநிலத்தின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான வேலைகள் இருப்பதாகக் கூறி, சம்மனை முதலமைச்சர் புறக்கணித்தார். தொடர்ந்து, ஆகஸ்ட் 24 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.  ஆனால் பல்வேறு காரணங்களை கூறி அவற்றையும் ஹேமந்த் சோரன் தவிர்த்துவிட்டார். அதன் பிறகு, விரிவான விளக்க அறிக்கை அளிக்கும்படி செப்டம்பர் 23 அன்று அமலாகக்த்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் எழுதிய கடிதத்தில், தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் ED க்கு வழங்கியதாகக் கூறினார். அமலாக்கத்துறைக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், ஏற்கனவே சமர்பித்த ஆவணங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அதைதொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மனையும் ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தான், ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாநில சமூக நலத்துறை இயக்குனராகவும், ராஞ்சி துணை கமிஷனராகவும் பணியாற்றிய 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரனும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Source link