19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன. முன்னதாக இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 5 முறை வென்றுள்ளது. இது தவிர, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 முறை விளையாடியுள்ளது. அதாவது, இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கவுள்ளது.
ஆறாவது முறையாக சாம்பியன் ஆகுமா இந்திய அணி..?
கடந்த 2000ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி வென்றது. இதற்கு பிறகு, கடந்த 2006ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2008ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. இதன்பின், 2012ல் இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து, இஷான் கிஷான் தலைமையிலான அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி வரை சென்றாலும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
2018ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்த முறை பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி எந்த தவறும் செய்யாமல், நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி ஐந்தாவது முறையாக வென்றது. இந்த இந்திய அணிக்கு யஷ் துல் தலைமை தாங்கி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்நிலையில் மீண்டும் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை இந்திய அணியின் தலைமை உதய் சஹாரன் கையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஆறாவது பட்டத்தை வென்று சாதனை படைக்கும்.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்தது எப்படி..?
உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி தனது முதல் பயணத்தை தொடங்கியது. இதன் பின்னர் அயர்லாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளை இந்திய அணி தோற்கடித்தது. அதனை தொடர்ந்து, இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.