Hasnuram Ambedkari UP Man Who Has Lost 98 Times To Contest Again in Lok Sabha elections 2024


Hasnuram Ambedkari: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் இன்னும் 4 நாள்களில் தொடங்க உள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஜனநாயக திருவிழாவின் மற்றுமொரு சுவாரஸ்யம்:
அனைவரும் சமம் என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் சாசனம் சாமானியன் கூட, இந்தியாவின் உச்சபட்ச பதவியை அடைவதற்கான உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அரசியல் ஜனநாயகத்தை தாண்டி சமூக ஜனநாயகத்தை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது நமது அரசியல் சாசனம்.
தேர்தலில் வெற்றி, தோல்வியை தாண்டி பங்கேற்பதே முக்கிய அரசியல் நடவடிக்கையாகும். அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் 78 வயதான ஹஸ்னுராம் அம்பேத்காரி. இதுவரை 98 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்த போதிலும் 99ஆவது முறையாக போட்டியிட தயாராகி வருகிறார் ஹஸ்னுராம் அம்பேத்காரி. 100 நாள் வேலை திட்டத்தின் (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
99வது முறையாக தேர்தலில் போட்டியிடும் முதியவர்:
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் கெராகர் தாலுகாவை சேர்ந்த இவர், கடந்த 1985ஆம் ஆண்டு, பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக முதல்முறையாக சுயேச்சையாக களம் கண்டார். இந்த முறை ஆக்ரா ரிசர்வ் தொகுதியிலும் ஃபதேபூர் சிக்ரி தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசிய அம்பேத்காரி, “இந்த முறையும் நான் இரண்டு தொகுதிகளிலும் தோற்கடிக்கப்படுவேன் என்பது உறுதி. ஆனால், 100வது முறையாக போட்டியிடுவதே எனது நோக்கம். அதன் பிறகு எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் கிராம பிரதான் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், கிராம பஞ்சாயத்து தேர்தல், சட்ட மேலவை தேர்தல், மக்களவை தேர்தல் என பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இந்திய ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவையும் நான் தாக்கல் செய்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.
யார் இந்த ஹஸ்னுராம் அம்பேத்காரி?
சுயேச்சையாக போட்டியிட்டு தொடர் தோல்வியை சந்தித்த அம்பேத்காரிக்கு ‘தர்தி பகட்’ என்ற செல்லப்பெயரும் உண்டு. இந்தியாவில் தொடர் தோல்வியை சந்திக்கும் நபரை ‘தர்தி பகட்’ என அழைப்பர்.  காக்கா ஜோகிந்தர் சிங் என்பவர் இதுவரை 300 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். முதன்முதலில், இவருக்குதான் ‘தர்தி பகட்’ என செல்லப்பெயர் வைக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட தொடங்கியது ஏன் என்பது குறித்து பேசிய அம்பேத்காரி, “கடந்த 1984 ஆம் ஆண்டின் இறுதியில் கெராகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எனக்கு வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தது. எனவே, எனது வேலையை விட்டுவிட்டேன். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரால் எனக்கு பின்னர் வாய்ப்பு மறுக்கப்பட்டது. உங்கள் மனைவி கூட உங்களுக்கு வாக்களிக்க மாட்டார். பிறகு எப்படி மற்றவர்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என என்னை கேலி செய்தார்.
இந்த அவமானத்திற்குப் பழிவாங்கும் வகையில் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றேன். மக்களிடம் வாக்குகளைப் பெற முடியும் என்பதை நிரூபிப்பதற்காக அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டேன்” என்றார்.
 

மேலும் காண

Source link