Kaanum Pongal 2024: 15,000 Policemen Will Be Deployed Across Chennai City Ahead Of Kaanum Pongal

சென்னையில் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதும் என்பதால் மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இதையடுத்து, சென்னை மாநகர் முழுவதும் 15, 000 காவல்துறையினர் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் 2என மொத்தம் 16,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். 
மேலும் சில கட்டுப்பாடுகள்…
பொங்கலுக்கு அடுத்த இரண்டாம் நாளான காணும் பொங்கலில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மகிழ்வர். இந்த நாளில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை முழுவதும் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலமாக ரோந்துபணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 
சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்கரையில் பெற்றோர்களோடு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை. அதன்படி, சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், காவல் உதவி மையங்கள், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 
காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? 
பொங்கல் விழாவின் நான்காவது நாளும், பொங்கலுக்கு அடுத்த இரண்டாவது நாளுமான பொங்கலை காணும் பொங்கல் என்று அழைக்கிறோம். காணும் பொங்கல் கன்னிப் பொங்கல் என்றும், கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.  காணும் பொங்கலின் சிறப்பே உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவை நடக்கும். மேலும், பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நாளை உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும். 
கன்னிப் பொங்கல் என்றால் என்ன..?
கன்னிப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணம் ஆகாத பெண்கள் ஒரு தட்டில் பழங்கள், தேங்காய், பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களுடன் அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களுக்கு சென்று வழிபடுவார்கள். அதாவது, ஆற்றங்கரை அல்லது குளக் கரையில் திருமணம் ஆகாத பெண்கள் எல்லாருமாக ஒன்று சேர்ந்து கும்மியடித்து பாடி இறை வழிபாடு நடத்துவார்கள். மேலும், காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைபிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இந்த வழிபாடு உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 
காணும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு நடத்துவதையும் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். சிலர், தங்கள் குல தெய்வ கோயில்களுக்கே சென்று பொங்கல் வைத்து வழிபாடும் செய்வார்கள். 

Source link