kanchipuram kamakshi amman temple brahmotsavam 2024 date utsavam details – TNN


காஞ்சி காமாட்சி 
கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார்.
 

பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது .

சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர்.  அத்தருணம் பராசக்தி,  காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்
கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார்.  பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்.
உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள் என நம்பப்படுகிறது.
காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். காமாட்சி அன்னைக்கு உருவம் கிடையாது என பக்தர்களால் நம்பப்படுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில்  பிரமோற்சவம் தொடக்கம்- பிப் 14-ந்தேதி  தொடக்கம் ( kanchi kamakshi temple brahmotsavam 2024 )
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14 ஆம் தேதி புதன்கிழமை காலையில் சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14 ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடனும், இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலாவோடும் திருவிழா தொடங்குகிறது.
விழாவையொட்டி ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான விழாப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பிப்.15 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழாக் கொடியேற்றமும், அதனையடுத்து காலையில் வெள்ளி விருஷப வாகனத்திலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் காமாட்சி அம்பிகை வீதியுலா வருகிறார். விழாவினைத் தொடர்ந்து தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளார். பிப்.17 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும்,இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் காண

Source link