Chennai High Court Warning Actor And Cinematographer Ilavarasu | Actor Ilavarasu: ஏடாகூடமாக பேசிய நடிகர் இளவரசு


Actor Ilavarasu: தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் தொடர்பான முறைகேடு வழக்கில் நடிகர் இளவரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த 2018ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தியாகராய நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைகேடு புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடித்து, 4 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. 
 
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த டிசம்பர் 12ம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராகி இளவரசு வாக்குமூலம் அளித்ததாகவும், அதற்கான கண்காணிப்பு கேமரா ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
போலீசாரின் இந்த தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளவரசு தரப்பு, தான் டிசம்பர் 13ம் தேதி தான் காவல்நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும், போலீஸ் தரப்பில் குறிப்பிட்டுள்ள 12ம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும்,போலீசார் சமர்ப்பித்துள்ள சிசிடிவி ஆதாரங்கள் போலியானது என்றும் கூறப்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் இளவரசு எங்கு இருந்தார் என்பதை தெரிந்து கொள்ள அவரது மொபைல் லொகேஷன் விவரங்களையும், மொபைல் அழைப்புகளையும், ஆய்வு செய்யுமாறு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டிருந்தார். 
 
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், இளவரசுவின் மொபைல் லொகேஷன் விவரங்களை தாக்கல் செய்தார். அதேநேரம், டிசம்பர் 12ம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், அப்போது தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. 
 
அதேநேரம், இளவரசு விசாரணைக்கு ஆஜரானரா இல்லையா என்பதை ஆதாரங்களுடன் விசாரித்த நீதிபதி, இளவரசு மீது கண்டனத்தை பதிவு செய்தார். அவர் டிசம்பர் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பொய் சொல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, குறிப்பிட்ட தேதியில்  காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானதை கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அப்படி செய்யவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இளவரசை நீதிபதி எச்சரித்தார். 
 

Source link