தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித்குமார் மிகவும் முக்கியமானவர். கடந்தாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை.
அஜித் பட அப்டேட்:
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், விரைவில் விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் பெயர் அறிவிப்பு வெளியான பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்ததால். அஜித் ரசிகர்கள் சோர்வடைந்து இருந்தனர்.
இந்த சூழலில், இன்று அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது. இதனால், விடாமுயற்சி படத்தின் போஸ்டர் ஏதும் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அஜித்குமார் நடிக்கும் 63வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வழக்கமாக வி சென்டிமென்டிலே அஜித்தின் படங்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மிகவும் முற்றிலும் மாறுபட்ட வகையில் குட் பேட் அக்லி என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான வில்லன் படத்திற்கே ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்து அவர் இயக்கிய அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படம் பெரிய தோல்வியைச் சந்தித்தது.
ரசிகர்கள் ஆர்வம்:
பின்னர், அவர் மார்க் ஆண்டனி என்ற வெற்றிப்படத்தை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து நடித்தார். அப்போது, அஜித்துடன் பழகும் வாய்ப்பை பெற்ற அவர், அஜித்திற்காக கதை ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த கதையே தற்போது குட் பேட் அக்லி என்ற பெயரில் படமாகிறது.
மேலும் படிக்க: AK 63 Title: ஏகே 63 படத்தின் டைட்டில் வெளியானது! மிரட்ட வரும் புது காம்போ – படுகுஷியில் அஜித் ரசிகர்கள்!
மேலும் படிக்க: Cooku With Comali: வெங்கடேஷ் பட்டுக்கு மாற்றாக குக்கு வித் கோமாளியில் இணையும் பிரபலம்! முக்கிய அப்டேட்!
மேலும் காண