Elon Musk: சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, எலான் மஸ்க் சீனா சென்றுள்ளார்.
சீனாவில் எலான் மஸ்க்:
சீனாவில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லாவின் தானாக இயங்கும் ஓட்டுநர் தொழில்நுட்பத்தை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திடீர் பயணமாக சீனா சென்றுள்ள அந்த நிறுவன தலைவரும், சர்வதேச தொழிலதிபரும் ஆன எலான் மஸ்க், சீனப் பிரதமர் லீ கியாங்கைச் சந்தித்து டெஸ்லா நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
ஆதரவு கரம் நீட்டும் சீனா:
சீனாவின் மிகப்பெரிய சந்தை எப்போதும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கு திறந்திருக்கும் என்று லி மஸ்க் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், ”அனைத்து நாடுகளின் நிறுவனங்களும் மன அமைதியுடன் சீனாவில் முதலீடு செய்யும் வகையில், சிறந்த வணிகச் சூழல் மற்றும் வலுவான ஆதரவுடன் வெளிநாட்டு நிதியுதவி நிறுவனங்களுக்கு வழங்க, சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், சேவைகளை மேம்படுத்தவும் சீனா கடுமையாக உழைக்கும். சீனாவில் டெஸ்லாவின் வளர்ச்சியை சீனா-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பின் வெற்றிகரமான உதாரணம் என்று குறிப்பிடலாம், சமமான ஒத்துழைப்பும் பரஸ்பர நன்மையும் இரு நாடுகளின் சிறந்த நலன்களில் உள்ளன என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன” என சீன பிரதமர் பேசியுள்ளார்.
எலான் மஸ்க் பெருமிதம்:
டெஸ்லாவின் ஷாங்காய் ஜிகாஃபாக்டரி டெஸ்லாவின் சிறந்த செயல்திறன் கொண்ட தொழிற்சாலை என்று மஸ்க் கூறினார். மேலும் இருதரப்புக்ளும் வெற்றி என்ற முடிவுகளை அடைய சீனாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும் பேசியுள்ளார். 2020 இல் ஷாங்காய் நகரில் ஏழு பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், தொழிற்சாலையை தொடங்கிய பிறகு டெஸ்லா சீனாவில் பிரபலமான EV ஆனது. ஆனால், உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களால் தற்போது கடும் போட்டியை சந்தித்து வருகிறது. இதனால், சீனாவில் தயாரித்த வாகனங்களின் விலைகளை ஆறு சதவீதம் வரை டெஸ்லா நிறுவனம் குறைத்துள்ளது.
இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க்:
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையைத் திறப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் எலான் மஸ்க் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் உள்நாட்டு நிறுவனங்களால் கடும் போட்டியை சந்தித்து வரும் சீனாவில், தனது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்க் அங்கு சென்றுள்ளார். இதனால், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை அமைப்பது மற்றும் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் மேலும் தாமதமாகியுள்ளன.
மேலும் காண