Lok Sabha Elections 2024 1966 Polling Stations Set Up For Parliamentary Elections In Villupuram District

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள்
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 97 வாக்குச்சாவடிகளும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 16 வாக்குச்சாவடிகளும் என 113 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்களில் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. தேர்தல் பணிக்காக மத்திய அரசு பணியில் உள்ள 136 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
கடந்த 22.1.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 569 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 795 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 213 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 577 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19,996 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16,284 பேரும், சர்வீஸ் வாக்காளர்களாக 1,204 பேரும் உள்ளனர். மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்கட்ட பரிசோதனை முடிக்கப்பட்டு பேலட் யூனிட்- 4,168, கண்ட்ரோல் யூனிட்- 2,614, விவிபேட்- 2,861 ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் 1950 என்ற இலவச அழைப்புடன் கூடிய வாக்காளர் உதவி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தை 24 மணி நேரமும் தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் வாக்காளர்கள், இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் தொடர்பான புகார்
இதுதவிர மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 1800 425 7019, 04146 – 221950, 04146- 223265 ஆகிய எண்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள், தேர்தல் தொடர்பான புகார்களை இதில்  அளிக்கலாம். தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று மாலை முதல் நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Source link