US State Department Report Highlights Human Rights Violation In Manipur held on 2023 india reacts


கடந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த இன கலவரத்தின்போது, மனித உரிமை மீறல், சிறுபான்மையினரை துன்புறுத்தல், கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், AFSPA, பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத கொலைகள் போன்றவற்றிற்காக அமெரிக்க வெளியுறவுத்துறையானது இந்தியாவை கடுமையாக சாடியுள்ளது.
மணிப்பூர் கலவரம்- அமெரிக்கா அறிக்கை:
இந்தியாவில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்தான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டது. “மணிப்பூரில் இன மோதல் வெடித்த பிறகு குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்தன” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .
மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்தில் என்ன நடந்தது, இனக்குழுக்களின் தலையீடு, கடந்த ஓராண்டாக நடந்து வரும் வன்முறை மோதல்களுக்கு மத்தியில் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன, வன்முறை குறித்து பிரதமர் மோடியின் கருத்து, ஐ.நா.வின் தலையீடு மற்றும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
“இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே இன மோதல் வெடித்தது. அதன் விளைவாக குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ( 2023 ) மே 3 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாகவும் 60,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது. 

”மோடி அரசு தோல்வி”:
மோடி தலைமையிலான அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு வன்முறையை தடுத்து நிறுத்துவதில் தோல்வியடைந்ததை உச்சநீதிமன்றம் விமர்சித்ததையும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வன்முறையை கருத்தில் கொண்டு, உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையை நிறுத்துவதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 
அறிக்கையில் பட்டியலிடப்பட்டவை சில:
சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் நடைபெற்றன. 
தனியுரிமையில் தன்னிச்சையான அல்லது சட்டவிரோத தலையீடு 
உறவினர்களின் குற்றங்களுக்காக குடும்ப உறுப்பினர்களுக்கு தண்டனை; பாலியல் வன்முறை 
பணியிட வன்முறை, 
குழந்தை திருமணம் மற்றும் கட்டாய திருமணம், 
இன மற்றும் சாதி சிறுபான்மையினரை குறிவைத்து வன்முறை    
இந்நிலையில் , இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை, உள்நாட்டு விவரங்களில் தலையீடு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காலனி ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அறிக்கை குறித்தான விரிவான தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். Also Read:

Source link