தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச நன்னாளில் மற்ற நாட்களை காட்டிலும் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அலைமோதும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம்:
தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தைப்பூசம் என்பதால், கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் கூட்டம் முருகன் கோயில்களில் அதிகளவு காணப்பட்டது.
நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் முருகன் ஆலயங்களில் அதிகளவு காணப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, தைப்பூசம் என்றால் மற்ற முருகன் கோயில்களை காட்டிலும் பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். பழனியில் நேற்று முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
குவியும் பக்தர்கள்:
இதனால், பழனிக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்றும் காலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து திரளாக கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்களின் வசதிகளுக்காக பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வரிசைகளும், சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்:
சென்னையிலும் வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடபழனி மட்டுமின்றி திருப்போரூர், சிக்கல் சிங்காரவேலர் கோயில் உள்பட பல முக்கியமான முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. தைப்பூசமான முருகப்பெருமான் மட்டுமின்றி சிவபெருமானுக்கும் உகந்த நாள் என்பதால் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட சிவாலயங்களிலும் இன்று தைப்பூச சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Thaipusam 2024: பழனியில் களைகட்டும் தைப்பூசத் திருவிழா; பக்தி பாடல்கள் பாடியபடி குவிந்து வரும் பக்தர்கள்
மேலும் படிக்க: Arupadai Veedu: “திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலை வரை” முருகனின் அறுபடை வீடுகள் எது? எது?