கேரளாவில் மஞ்சள் காமாலை நோய் பரவி வரும் நிலையில், 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் தற்பொழுது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் வெங்கூர் பஞ்சாயத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது.
பின்னர் நோய் பலருக்கும் பரவியது. தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து, 150 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெங்கூர் பஞ்சாயத்தில் ஏராளமானோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, பெரும்பாவூர் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் பரவலுக்கு காரணம், அப்பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் குளத்தை சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதே என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பலரின் குடும்பத்தில் 2 முதல் 4 பேர் வரை மஞ்சள் காமாலையல் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குடிநீர் மூலம் வேகமாக மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.