பிரதமர் நரேந்திரமோடி இசுலாமியர்கள் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமியும் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
‘கண்டனம் இல்லாமல் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி’
ஆனால், அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் ‘கண்டனம்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக, இது போன்ற பேச்சுக்கள் நாட்டின் நலனுக்காக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கண்டனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல், இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் பிரதமர் பேச்சு குறித்த தன்னுடைய அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, மிக கவனமாக, இந்த கருத்து இறையாண்மைக்கு உகந்தது அல்ல, இசுலாமியர்கள் மனதை புண்படுத்தும்படி இதுபோன்ற கருத்துகளை பேசுவது ஏற்படையதல்ல என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
’எஸ்.டி.பி.ஐ கட்சிக்காக அறிக்கை வெளியீடா?’
அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி மிக முக்கிய அங்கத்தை வகித்தும் வரும் நிலையில், மோடியை நேரடியாக எதிர்க்காமல், பெயருக்காக ஒரு அறிக்கையை மட்டும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாரா? என்ற சந்தேகமும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியே மத்தியில் அமையும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அதிமுகவில் தன்னுடைய தலைமைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிமோ என்ற எச்சரிக்கை உணர்வில் இதுபோன்ற சாஃப்ட் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் அரசியல் களத்தில் விவாதம் எழுந்துள்ளது
’வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள்’
அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 3வது முறையாக பாஜக ஆட்சி அமைந்தால், தாங்கள் கூட்டணிக்கு வரவில்லையென்று, பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கிவிடுமோ என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற அறிக்கை வெளியிட காரணம் என கூறப்படுகிறது.
’பாரத பிரதமர் என்று குறிப்பிட்ட ஈபிஎஸ்’
பிரதமர் என்று கூட சொல்லாமல தன்னுடைய அறிக்கையில் முதல் வரியிலேயே பாரத பிரதமர் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே தீவிர பாஜக எதிர்ப்பை கைவிட்டுவிடுவாரோ என்ற தோற்றம் இந்த அறிக்கையின் மூலம் உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
’பாஜக எதிர்ப்பில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார் – அதிமுக தொண்டர்கள் கருத்து’
ஆனால், தன்னுடைய பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்றும், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தாலும் கொள்கை ரீதியாக பாஜகவை அவர் எதிர்ப்பது தொடரும் என்றும், தேர்தலின்போதே பாஜகவிற்கு பயப்படாதவர், இதன் பிறகும் அவர்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார் என அதிமுகவினர் தெரிவித்துள்ளர்.
மேலும் காண