Electoral Bond: தேர்தல் பத்திரம் திட்டம் செல்லுபடியாகுமா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தால் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப் பெற்றது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது. ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்களை பாரத் ஸ்டேட் வங்கி தான் வெளியிடும். இதனை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு அரசியல் கட்சிகள் அனுமதி வழங்கும்.

இதனிடையே இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான விவரங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பிரச்சினையை கிளப்பியது. அதன்படி 2022-23 ஆம் நிதியாண்டில் பாஜக ரூ.1,294 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.171 கோடி பெற்றுள்ளது. மொத்த விற்பனையில் 55 சதவிகித தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. ரூ.12 ஆயிரம் கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.6,564 கோடி பாஜகவுக்கு கிடைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இப்படியான நிலையில் தேர்தல் பத்திரங்கள் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார்? யார்? என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது.இந்த திட்டத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை” என கூறியிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Source link