director mari selvaraj talks about VCK Leader Thirumavalavan’s Victory | Mari Selvaraj: என் வெற்றியை கூட தாங்க முடியல.. திருமாவின் வெற்றி பற்றி சொல்லவா வேண்டும்?


பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 
எழுச்சித் தமிழர் இலக்கிய விருது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கினார். மாமன்னன் படத்துக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை. அதனை அளவிட முடியாதது. அதனை திரைக்கதை வடிவமாக மாற்ற முடியாது. முக்கியமாக நிஜத்தையே அனுமதிக்காத சென்சார் போர்டு என்னுடைய கோபத்தை மட்டும் அனுமதித்து விடுமா?. நான் இதுவரை பதிவு பண்ணியது எல்லாமே என்னிடம் இருந்த நிஜம் அவ்வளவு தான்.
நம்ப வைத்த திருமா பேச்சு:
அதை கோபமாக மாற்றினால் அதன் வீச்சு வேறு மாதிரி இருக்கும். அதைவிட அவசியம் என்னவென்று பார்த்தால் வரப்போகும் தலைமுறைகளுக்கு நிஜத்தை, வலியை வெளிப்படுத்துவதன் மூலமாக அவர்கள் இந்த சமூகத்தில் நுழையும்போது முழுவதுமாக தயார் படுத்த வேண்டும். அந்த கடமை எனக்கு இருக்குன்னு  திருமாவளவனின் பேச்சு தான்  நம்ப வைத்தது. 
பரியேறும் பெருமாள் படத்தில் அப்பா நிர்வாணமாக ஓடி வரும் காட்சியை நினைத்து நிறைய பேரு ஃபீல் செய்தார்கள். நான் அப்ப யோசிப்பேன். நான் 3 படங்கள் கொடுத்த நிலையில் அது இவ்வளவு பெரிய வன்மத்தை, கோபத்தை கிளறி விடுகிறது என்றால், என்னுடைய வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கும்போது திருமாவளவனின் வெற்றியை, எழுச்சியை புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும்? இந்த சமூகம் அதை புரிந்துக் கொள்கிறதோ இல்லையோ, தன் பக்குவப்பேச்சால் கேட்கக்கூடிய காதுகள் குறைந்தப்பட்ச நேர்மையை நோக்கி நகர்த்த கூடிய வேலையை திருமாவளவன் செய்துக் கொண்டிருக்கிறார். 
திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பு:
நான் சென்னை வந்தவுடன் இயக்குநர் ராமிடம் என்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தேனோ, இயக்குநர் பா.ரஞ்சித்தை நம்பி ஒப்படைத்தேனோ அதே மாதிரி இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனுடன் இருந்தது ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அது பயத்தினால் வரும் பாதுகாப்பு அல்ல. தொடர்ந்து என்மீது சுமத்தக்கூடிய அவசியமற்ற பெருமைகளில் இருந்து என்னை பாதுகாப்பதே வேலையாக உள்ளது. 
இந்தியா எங்கும் பெருமை அரசியல் உள்ளது. அதனை கொடுப்பதால் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. அப்படியான நிலையில் ஒரே ஒரு ஆள் மட்டும் நிலைநிறுக்கிறார் என்றால் அது திருமாவளவன் தான். ஒரு பெரும் கூட்டத்தை யார் வேண்டுமானாலும் மடைமாற்றம் செய்து பள்ளத்தில் தள்ளி விடலாம். ஆனால் ஒரு சிறுத்தை கூட்டத்தை தனியாளாக திருமாவளவன் நிலை நிறுத்துகிறார்.  அது சாதாரண விஷயம் அல்ல” என மாரி செல்வராஜ் கூறினார். 

மேலும் காண

Source link