IND Vs ENG Test First Innings…Indian Team Stronger Than England

 
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
 
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  இதில், முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், 66 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் – ஸ்ரேயாஸ் அயயர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னிலையை நோக்கி கொண்டு சென்றது.
முன்னிலையில் இருக்கும் இந்தியா:
சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர்  35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.  சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே எஸ் பாரத் ஜோடியும்  சிறப்பாக விளையாடி அணியின் முன்னிலையை வலுப்படுத்தும் நோக்கில் பேட்டிங் செய்தது.
அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் அடித்தார். மறுமுனையில் கே எஸ் பாரத் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்துள்ளது.  இது இங்கிலாந்து அணியை விட 175 ரன்கள் அதிகமாகும். ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? – விவரம்
 
மேலும் படிக்க: ICC T20I Player of the Year 2023: ஐசிசி 2023 டி20 விருது.. இரண்டாவது முறை.. உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
 

Source link