ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி உட்பட எப்படிப்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியை பரிசாக வழங்குவோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்கசாலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலை, அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலை எத்தனை பாதயாத்திரை மேற்கொண்டாலும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி அல்ல, எப்படிப்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும், அவர்களுக்கு தோல்வியை பரிசாக நாங்கள் வழங்குவோம் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டியா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, திமுக என்பது தங்கம். என்றும், பாஜக என்பது தகரம் என்றும் கூறிய அமைச்சர் சேகர்பாபு, தங்கத்தை எப்போதும் தகரத்தோடு ஒப்பிடாதீர்கள் என்று பதிலளித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எவ்வித அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை என்ற அமைச்சர், கோயிலின் தீட்சிதர்களால் பக்தர்களுக்கு துன்பம் ஏற்படும் போது அறநிலையத்துறை தலையிட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.