Polio Drops Camp is being held all over Tamil Nadu today cm stalin requested to parents


தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
போலியோ சொட்டு மருந்து முகாம்
இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் போலியோ நோயால் (இளம் பிள்ளை வாதம்) பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. 
காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் என கிட்டதட்ட 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
முன் நடவடிக்கைகள் என்ன? 
சொட்டு மருந்து கொடுக்கும் முன்பு பணியாளர்கள் சோப்பு போட்டு கைகழுவுவது, சானிடைசர் உபயோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய தடுப்பூசி அட்டவணையில் சில நாட்கள் முன்னதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியிருக்கலாம். ஆனால் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மேலும் சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் இன்று சொட்டு மருந்து பெறும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது. தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றது. 

அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்!போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்…நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி! pic.twitter.com/rmAuX4wYPl
— M.K.Stalin (@mkstalin) March 3, 2024

இன்று பல்வேறு காரணங்களுக்காக சொட்டு மருந்து முகாம்களில் கலந்து கொள்ள முடியாத பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம், ரயில் நிலையம், சோதனை சாவடி, டோல்கேட்டுகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். 
இந்நிலையில் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்… நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி!” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link