Khelo India Youth Games 2023 Tamilnadu Held Places Sports List Check The Details | Khelo India Games: கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம்

Khelo India Youth Games: சென்னையில் இன்று தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கேலோ இந்தியா விளையாட்டு:
சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இன்று மாலை 6 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதில், ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதைதொடர்ந்து, சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டி விவரங்கள்:
சென்னையில் முதன்முறயாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.  முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள்  இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை,  விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
5,500+ விரர்கள்:
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள். போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
தமிழக விளையாட்டுத்துறை:
உலக சதுரங்கக் கூட்டமைப்பின் சார்பில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை மாமல்லபுரத்தில் மகத்தான திருவிழாவாக தமிழ்நாடு அரசு நடத்தி வெற்றி பெற்றது. அதேபோல, இந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள் – 2023 தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று, தமிழகத்தின் புகழ், மகுடத்தில் பதிக்கப்படும் மற்றொரு மாணிக்க முத்திரையாக அமையும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சர்வதேச தரத்திலான கார் பந்தயமும் விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. இதன் மூலம், தமிழகம் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான முக்கிய அரங்கமாக மாறி வருவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Source link