China On Ties With Maldives Amid India Tourism Controversy Says No Zero Sum Game

Maldives Controversy லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 
ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்றும் மாலத்தீவு எம்பி கூறியிருந்தார். இதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
பற்றி எரியும் மாலத்தீவு விவகாரம்:
எம்.பி.ஜாஹித் ரமீஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜீத் பேசினார். மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் வரிசையில் மற்றொரு அமைச்சரான மரியம் ஷியூனா, இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசினார். மாலத்தீவு எம்பியும் அமைச்சரும் தெரிவித்த கருத்து இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
பெரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பேசிய 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 
மாலத்தீவு – இந்திய நாடுகளுக்கு கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றுள்ளார். மாலத்தீவு, சீன நாடுகளுக்கு இடையே பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தியாவுக்கு சீனா அட்வைஸ்:
இந்த நிலையில், மாலத்தீவு, இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து சீனா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. தெற்காசிய விவகாரங்களை திறந்த மனதுடன் இந்தியா அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கத்தில், “மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு மற்றும் கூட்டுறவை மதிக்கிறோம். இந்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்கு மாலத்தீவு அரசுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நாங்கள் முழுமையாக அறிந்திருக்கறோம். 
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக இந்தியாவை நிராகரிக்குமாறு மாலத்தீவு அரசை சீன அரசு ஒருபோதும் கேட்கவில்லை. மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே முத்தரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் சீனா தயாராக உள்ளது. 
இந்தியாவுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதில் பலன் அடைவதை கொள்கையாக வைத்திருக்கவில்லை. எனவே, திறந்த மனதோடு இந்திய அரசு இருக்க வேண்டும்” என்றார்.

Source link