இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தும் ‘பிகே ரோஸி திரைப்பட விழா’ ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 4ம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல் சிறப்புரை ஆற்றினார்.
பாலாஜி சக்திவேல் பேசுகையில் பா. ரஞ்சித் இந்த திரைத்துறையில் நுழைவதற்கு முன்னர் இருந்த சினிமாவிற்கும் அவர் வந்ததற்கு பிறகு இருக்கும் சினிமாவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. அவர் எடுக்க கூடிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய அதிர்வலைகள், தாக்கம், கலாபூர்வமான அழுத்தமான படைப்புகளாக தான் அமைந்துள்ளன. அவரின் இந்த வருகை இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.
மனிதர்களின் அழகியல், உணர்வை அவர் மட்டுமே இயக்குவதோடு நின்றுவிடாமல் ஒரு தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள் முதல் ஜே பேபி வரை பல அருமையான படைப்புக்களை அறிமுக இயக்குநர்கள் மூலம் வெளிகொண்டு வந்துள்ளார். தன்னுடைய கலை சேவையை அத்துடன் நிறுத்தி கொள்ளாமல் அதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சி அவரின் நேர்மையை சுட்டிக்காட்டுகிறது.
படங்களை இயக்குவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதுடன், நூலகம், வானம் நிகழ்ச்சி மூலம் வரும் தலைமுறையினருக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுப்பது மூலம் கலைக்கு சேவை செய்து வருகிறார். அவரின் இந்த செயல்பாடு மிகப்பெரிய மாற்றத்திற்கான வழித்தடமாக அமைந்து வருகிறது. இதற்காக அவர் பல சிக்கல்களையும் சந்தித்து வருகிறார். இது போன்ற ஒரு திரைப்பட விழா நடத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
அதே நேரத்தில் திரைப்படங்களையும் ஒரு பக்கம் எடுத்து வரும் பா. ரஞ்சித் அதன் மூலம் வரும் வருமானத்தை இது போன்ற திரைப்பட விழாவிற்கு எந்த ஒரு லாபத்தையும் பார்க்காமல் செலவு செய்து வருகிறார். இதன் மூலம் வரும் தலைமுறையினருக்கு, கலைத்துறையில் முன்னேற்றத்திற்கு முதலீடு செய்து வருகிறார். பா. ரஞ்சித் படங்கள் மட்டுமின்றி அவரின் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் கூட இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா. ரஞ்சித் மிகவும் கோபக்காரர். அவரின் கோபத்திற்கு பின்னால் ஒரு அர்த்தம் உள்ளது, வலி உள்ளது. அதை கதாபாத்திரங்கள் மூலம் பேச வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை அவ்வளவு எளிதில் யாராலும் துணிச்சலாக செய்து விட முடியாது என பேசி இருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
மேலும் காண