CSK Vs KKR, IPL 2024: சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
சென்னை – கொல்கத்தா மோதல்:
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறது.அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. நடப்பு தொடரில் இங்கு நடந்த முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது.
கடந்த இரண்டு போட்டிகளிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். பந்துவீச்சிலும் ஒரு சில வீரர்கள் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம். மறுபுறம் கொல்கத்தா அணியோ பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். குறிப்பாக பவர்பிளேயில் சுனில் நரைன் சென்னை அணிக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். பந்துவீச்சிலும் நல்ல லைன் – அப்பை கொல்கத்தா அணி கட்டமைத்துள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 225 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
சேப்பாக்கம் மைதானம் வழக்கம்போல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், பல்வேறு வேரியேஷன்களை கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்க்க சிரமப்பட வேண்டி இருக்கும்.
உத்தேச அணி விவரங்கள்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
டெல்லி: பிலிப் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
மேலும் காண