Mission : Chapter 1 Movie Review Arun Vijay Nimisha Sajayan Amy Jackson Directed By Vijay

Mission : Chapter 1

Action/Mystery
இயக்குனர்: Vijay
கலைஞர்: Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan, Bharat Bopanna, Baby Iyal

இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியுள்ள படங்களில் அதிக புரோமோசன் இல்லாமல் வெளியாகியுள்ள படம் என்றால் அது நடிகர் அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்ட்டர் 1. இந்த படத்தினை விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் லைகா பேனரில் வெளிவந்துள்ளது. 
படத்தின் கதையை எடுத்துக்கொண்டால் ஏதோ ஆஹா ஓஹோ கதையெல்லாம் கிடையாது. படத்தின் முதல் காட்சியே அமோகமாக உள்ளது. அதாவது ஆதிகாலத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிட்டார்கள் என சிறுவயதில் ஒருசில படங்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதேமாதிரிதான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவிட்டனர். இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டினை தடுக்கவேண்டும். இது இந்திய அரசுக்கு தெரியவே, உடனே தீவிரவாதிகள் தங்களின் கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் செல்கின்றனர்.
லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் உள்ளார். அருண் விஜய் தனது குழந்தையின் மருத்துவ தேவைக்காக லண்டன் செல்கின்றார். அங்கு அவரின் பர்ஸை திருட முயற்சி செய்யும் திருடர்களைத் தாக்கும்போது காவல்துறை தடுக்கின்றது. அப்போது காவல்துறையையும் தாக்குவதால் அருண் விஜய் திவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹேக் செய்யப்படுகின்றது.  அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தெரிந்துகொண்ட அருண் விஜய் அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டனரா இல்லையா? அருண் விஜய் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதா இல்லையா என்பது மீதி கதை. 
மிகவும் ஃபிளாட்டான ஒன் லைன். அதனை ஆக்‌ஷன் காட்சிகளால் நிரப்பி ரசிகர்களை திருப்தி படுத்திவிடலாம் என படக்குழு நினைத்ததோ என்னவோ படத்தின் கதை ஒர்க்-அவுட்டே ஆகவில்லை. படம் முழுக்க வில்லன் கேமரா முன்பு நின்று கொண்டு பேசிக்கொண்டு உள்ளார். இறுதியாக ஒரு சண்டை செய்கின்றார் அதுவும் ரசிக்கும்படியாக இல்லை. எமி ஜாக்‌ஷன் படம் முழுக்க டயலாக் டெலிவரி மட்டும் செய்துகொண்டு உள்ளார். ஒரு காட்சியில் மட்டும் எமி ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றார். படத்தில் இருக்கும் ஒரு சிறப்பான காட்சி என்றால் அது மிளகாய்ப்பொடி காட்சிதான். அருண் விஜயின் குழந்தை பேசும் செண்டிமெண்ட் வசனங்கள் கொஞ்சம் உருகவைக்கின்றது. ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலே அடித்து நொறுக்கும் அருண் விஜய் இந்த படத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். ஆனால் அது கதைக்கும் ஒட்டவில்லை, ரசிகர்களிடமும் எடுபடவில்லை.
படத்தின் திரைக்கதை தரமாக இருக்கும்போது அதற்கு நியாயம் கற்பிக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்க்கும். ஆனால் இந்த படத்தின் திரைக்கதை ஒட்டாததால் சண்டைக்காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. பொங்கலை குறிவைத்து வெளியாகியுள்ள மிஷன் பொங்கல் வரைக்கும் தாக்குப்பிடிக்குமா? எனத் தெரியவில்லை. ஒருபடத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சிறப்பாக நடிக்கும் அருண் விஜய் கதைத் தேர்வில் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் மிளிரலாம். 

Source link