யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது.
அந்த வகையில் வயக்காட்டை சமையல்காட்டாக மாற்றி லட்சக்கணக்கான சப்ஸ்கரைபர்களை பெற்று டைமண்ட் ப்ளே பட்டனை பெற்று சாதனை படைத்துள்ள யூடியூப் சேனல் ‘வில்லேஜ் குக்கிங்’.
தாத்தாவும் பேரன்களும் இணைந்து உருவாக்கிய இந்த யூடியூப் சேனல் மூலம் வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த சமையலை வயக்காட்டுக்கு எடுத்து வந்து புதிதாக முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர். இந்த வித்தியாசமான முயற்சி ஏராளமானோரின் கவனம் ஈர்த்து ரசிகர் பட்டாளத்தை எகிற வைத்தது.
சமையல் கலைஞரான பெரியதம்பி தலைமையில் இந்த யூ டியூப் சேனலில் காய்கறிகளை வெட்டுவதில் இருந்து அவர்கள் சமைப்பதற்காக இடத்தை தேர்ந்து எடுப்பது என அனைத்திலுமே தனித்துவம் இருக்கும். கிட்டத்தட்ட 100 பேர் சாப்பிடும் அளவுக்கு சமைத்து அதை முதியோர் இல்லம் மற்றும் ஊர்க்காரர்களுக்கு உணவளிப்பார்கள். இவர்களின் வீடியோ சமையலை பற்றி மட்டுமல்லாது கிராமத்து வாழ்க்கையையும், சுற்றுப்புறங்களையும் பதிவு செய்வது பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தது. அதுவே இந்த ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
இந்த குக்கிங் சேனலின் மூல காரணமான தாத்தா பெரியதம்பி இருதய நோய் சம்பந்தமான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதை அறிந்த அவரின் ரசிகர்கள் மற்றும் சப்ஸ்கரைபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது அவர் நலமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெருவிரல் காட்டி நன்றாக இருக்கிறேன் எனக் காட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றை ‘வில்லேஜ் குக்கிங்’ சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அக்கறையும் ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர் இந்த யூடியூப் சேனல் உரிமையாளர்கள்.
விரைவில் தாத்தா பெரிய தம்பி, நலம் பெற்று வீடு திரும்பி புதிய உத்வேகத்துடன் சமையல் வீடியோக்களை போட வேண்டும் என அவரின் தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வாழ்த்தி வருகிறார்கள்.
மேலும் காண