Former minister RM Veerappan body will be cremated with government honors


தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மேலாளராகவும் மிகப்பெரிய விசுவாசியாகவும் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் அரசியல் களத்தில் பல வெற்றிகளை குவிக்க பக்கபலமாக செயல்பட்டவர். 
திரைத்துறையை பொறுத்தவரையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய சத்யா மூவீஸ் மூலம் எம்.ஜி.ஆர் நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்‌ஷாக்காரன் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை  தயாரித்தவர். எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தவர். 
 

தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக மூன்று முறையும், தமிழ்நாடு அரசு கல்வி, உணவு, சுற்றுலா மற்றும் அறநிலை துறைகளுக்கு அமைச்சராக ஐந்து முறையும், சட்டமன்ற உறுப்பினராக 2 முறையும் பதவியில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என பல துறைகளில் பணியாற்றி, அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமை கொண்ட ஒரு சாதனையாளராக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பன் நேற்றைய தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 98. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசியல் தலைவர்கள் பலரும் ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.
ஆர்.எம்.வீரப்பன் உடல் அவரின் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசியல் கட்டமைப்பில் பெரும் தொண்டாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தி அடக்கம் செய்ய காவல்துறை ஆணையருக்கு உத்தரவு வழங்கப்பட்டு, அதன்படி நடத்தப்பட்டது

மேலும் காண

Source link