leo director lokesh kanagaraj celebrates his birthday lets have a look at how lokesh kanagaraj renewed tamil commercial cinema


’ஏதாவது புதுசா செய்யணும்’ ஒரு கமர்ஷியல் படம் எடுக்க ஆசைப்படும் எந்த ஒரு இயக்குநரும் தன் மனதில் நினைத்து கொள்ளும் ஒன்று. கதைகள் எல்லாம் ஒன்றுதான் அவற்றை சொல்லும் விதத்தில் தான் புதுமையை செய்ய முடியும். நீண்ட நாட்களுக்குப் பின் தமிழ் வெகுஜன சினிமா பரப்பில் கொஞ்சம் புதிதாக கதைசொன்னவர் லோகேஷ் கனகராஜ். அப்படி லோகேஷ் கனகராஜ் கமர்ஷியல் சினிமாவில் ட்ரெண்டாக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்
கதையை குறுகிய காலத்தின் பின்னணியில் வைத்து சொல்வது..
சுவாரஸ்யமான ஒரு கதை சொல்வதற்கு லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தும் ஒரு அம்சம். டைம் . ஆங்கிலத்தில்  Running Against Time  என்று சொல்வோம்.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கப்படவேண்டிய ரூல் இந்த மாதிரியான கதைகளில் இருக்கும். இதனால் பார்வையாளர்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் கூடும்.  மாநகரம் மற்றும் கைதியை சுவாரஸ்யமானதாக மாற்றியது இந்த டெக்னிக்தான். அதுவும் மாநகரம் படத்தில்  லோகேஷ் கனகராஜ் ஆடியன்ஸுடன் ஒரு  தைரியமாக  ஒரு கேம் விளையாடி இருப்பார். கடைசிவரை அந்தப் படத்தின் கேரக்டரின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை. நாமும் கடைசியில் அவர் ஞாபகப் படுத்துவது வரை கேட்பதுமில்லை.
மல்டிகாஸ்ட்
உண்மையைச் சொன்னால் பார்த்த முகத்தையே பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டது. புது நடிகர்களை பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மனதில் எப்போது இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் அளவு வேறு எந்த மொழியில் இவ்வளவு கேரக்டர் ஆர்டிஸ்ட்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் புது நடிகர்கள் , குணச்சித்திர நடிகர்களின் குறைந்து போனது. நடிகைகளையும் வாட்டசாட்டமான வில்லன்களை மட்டும் மற்ற மொழிகளில் இருந்து இயக்குநர்கள் கடன் வாங்கிக் கொண்டார்கள். லோக்கியின் வருகைக்கு பின் மல்டி காஸ்டிங் என்கிற கான்செப்ட் அதிகம் பிரபலமாகி இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கலாம் அதே நேரத்தில் தனது இமேஜையும் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
பூமர்தனங்களை காலி செய்தது
ஒரு ஸ்டார் இப்படித்தான் நடிக்க வேண்டும் இப்படி எல்லாம் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு சில ரூல்ஸை உடைப்பது லோகேஷ் ரசித்தே செய்கிறார்.  விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கஞ்சா புகைப்பது, மாஸ்டர் படத்தில் விஜய் குடிப்பது , பொய் பேசுவது ,  விக்ரம் படத்தில் மோனிங் சாங் என்று தனியாக ஒரு பி.ஜி.எம் வைப்பது என கொஞ்சமாக அவ்வப்போது விளையாடிப் பார்ப்பது அவர் வழக்கம்.
ஆக்‌ஷனில் புதுமை
லோகேஷ் கனகராஜ் சொன்னதுபோல் தனது ஆக்‌ஷன் காட்சிகளை முடிந்த அளவு சுவாரஸ்யப்படுத்த முயற்சிக்கும் ஒருவர். ஏதோ ஒரு வகையில் ஒரு சாதாரண சண்டைக் காட்சிகளில் புதுமையை சேர்க்க நினைப்பவர். மாநகரம் படத்தில் பேண்ட் பாக்கெட்டிற்குள் ஆசிட் பாட்டிலை போட்டு உடைக்கும் காட்சி அவரது ஆக்‌ஷன் தாகத்தை புரிந்துகொள்ள போதுமானது
இங்கிலீஷ் பாடல்களை அறிமுகப்படுத்துவது
90 கிட்ஸ்கள் தொட்டு ஆங்கில பாப் பாடல்கள் வெகுஜனத்தில் பிரபலமாக இருந்திருக்கின்றன. மைக்கல் ஜாக்ஸன் , ஏகான் , ஷகிரா, தற்போது பில்லி ஐலீஷ் வரை  பாடல்களை நாம் கேட்டபடி தான் இருக்கிறோம். அதே நேரத்தில் பழைய பாடல்களின் மீதான் ஈர்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த அம்சத்தை தான் லோகேஷ் கனகராஜின் படங்கள் பிரதிபலிக்கின்றன. மொழி வித்தியாசம் இல்லாமல் எந்த பாடலை அவர் படத்தில் கேட்கலாம்.
ஒவ்வொரு காலத்திலும் தீவிர சினிமா ரசிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு சினிமா ரசிகர்கள் இடையில் மோதல் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இரு தரப்பினரையும் திருப்திபடுத்துவது கடினம்தான் . ஆனால் இரு தரப்பினரையும் ஒரே திரையரங்கில் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து பார்க்க வைத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். 

மேலும் காண

Source link