சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் நேற்று இரவு தனியார் நிறுவனமான டிஸ்டில்லரியின் ஊழியர்கள் அனைவரும் பணி முடிந்து கம்பெனி பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு 30 தொழிலாளர்கள் பயணித்த பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுரங்க பள்ளத்தின் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 14க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
Chhattisgarh: 12 killed, 14 injured after bus overturns and falls into ditch in DurgRead @ANI Story | https://t.co/Ex1JY2ZlET#Chhattisgarh #Durg #Accident pic.twitter.com/M8qUV1yPRP
— ANI Digital (@ani_digital) April 9, 2024
விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபட்டனர். காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேசமயம் இறந்த தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “துர்க்கின் கும்ஹாரி அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது. இந்த விபத்தில் 11 ஊழியர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.விபத்தில் காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
உடனடியாக மருத்துவனைக்கு வந்த துணை முதல்வர் விஜய் சர்மா, சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமையை மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சாலையின் இருபுறமும் 20 அடி ஆழமுள்ள சுரங்க பள்ளங்கள் இருக்கிறது. இவை 20 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பேருந்தின் முகப்பு விளக்குகள் எரியாமல் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக நோயாளி ஒருவர் தெரிவித்ததாக விஜய் சர்மா கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த பேருந்து விபத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கவலை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
மேலும் காண