lal salaam movie heroine talks about her studies in recent interview | Ananthika Sanilkumar: ஸ்கூல் படிப்பு கூட முடியல.. அதுக்குள்ள ரஜினி பட ஹீரோயின்


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது ஆசீர்வாதமாக உணர்ந்தேன் என லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அனந்திகா சனில் குமார் தெரிவித்துள்ளார்.
லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த  பிப்ரவரி 9 ஆம் தேதி  “லால் சலாம்” படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த நிலையில் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கபில்தேவ் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். 
இதனிடையே இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அனந்திகா சனில் குமார் அறிமுகமாகியுள்ளார். முதல் படமே அவருக்கு ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அனந்திகா, “லால் சலாம் படம் ரிலீசான பிறகு எல்லாருக்கும் பிடிக்குமா என்ற டென்ஷன் தான் இருந்தது. சென்னையில் முதல்முறையாக சினிமா தியேட்டரில் படம் பார்த்தேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது ஆசீர்வாதமாக உணர்ந்தேன்.
நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நான் கேரளாவைச் சேர்ந்தவள் என்றாலும் இன்னும் மலையாளத்தில் ஒரு படமும் பண்ணவில்லை. நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு படம் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. ஆனால் படம் ரிலீசாகும்போது என்னுடைய பகுதி முழுக்க எடிட்டிங்கில் நீக்கப்பட்டு விட்டது. அது நிவின்பாலி நடித்த படம். படம் எடிட்டிங்கில் பார்க்கும்போது 3 மணி நேரம் இருந்தது. அதனை 2 மணி நேரமாக குறைக்க என்னுடைய காட்சி நீக்கப்பட்டிருந்தது. 
எல்லா படங்களின் ஷூட்டிங்கின் போதும் தேர்வு குறுக்கே வந்து பிரச்சினையாக இருக்கும். எப்பவுமே ஷூட் முடிந்த பிறகும், இரண்டும் ஒரே நேரத்தில் வரும் மாதிரி இருக்கக்கூடாது என நினைப்பேன். இப்படி நினைக்கும்போது நான் 10 ஆம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் 12 ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு. கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நான் எப்படி சமாளித்து தேர்வு எழுதப் போகிறேன் என தெரியவில்லை. எனக்கு 3 ஆம் வகுப்பு படிக்கும்போது தற்காப்பு கலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதனை கற்று என்னுடைய ஃப்ரண்டை அடித்து விட்டேன். அந்த பையன் என்னை கமெண்டில் லிமிட் தாண்டி பேசியதால் அடித்து விட்டேன். அம்மா முன்னிலையில் தான் நான் அந்த பையனை அடிச்சேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link