போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் ஜன.9-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதலே வேலை நிறுத்தம் நடைபெற துவங்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலை என்ன ?
இந்த நிலையில்,போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 10 பணிமனைகள் உள்ளது அதில் சுமார் 850 பேருந்துகள் உள்ள நிலையில் போக்குவரத்து ஊழியா்களான டிரைவா், கண்டக்டா் உட்பட சுமாா் 700 போ் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இதனால் சென்னை, செங்கம், காஞ்சிபுரம், திண்டிவனம், புதுச்சேரி , கோயம்பத்தூர், பெங்களூர், திருப்பதி, சித்தூா், வேலூா், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நள்ளிரவு முதல் செல்லாது என திருவண்ணாமலை பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தெரிவித்துள்ளது.
அரசு பேருந்தை தள்ளிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 90% பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் பணிமனைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம்போல பேருந்துகள் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு புதுச்சேரிக்கு செல்வதற்க்காக அரசு பேருந்து வந்தது. அப்போது புதுச்சேரி செல்லும் வழி தடத்தில் நிறுத்துவதற்காக பேருந்தை முன்பக்கம் சென்று பின்பக்கம் இயக்கும் போது திடீரென பேருந்து நின்று விட்டது. அந்த பேருந்தை ஓட்டுநர் இயக்க முற்பட்டபோது பேருந்து பழுது அடைந்துள்ளது. பின்னர் அங்கு இருந்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர், அனைவரும் பழுது அடைந்த பேருந்தை தள்ளினார். ஆனால் அரசு பேருந்து அங்கு இருந்து தள்ள முடியாமல் திணறினர். இதனால் பேருந்தில் செல்லக்கூடிய பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் மற்ற இடத்திற்கு செல்ல கூடிய பேருந்து செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் ஒருவர் நம்மிடம் தெரிவிக்கையில்,
இந்த அரசு பேருந்து புதுச்சேரிக்கு சென்று வரும். பேருந்து வாங்கியதில் இருந்து பழுதாகிக்கொண்டே இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது பழுதாகிவிடும். இந்த பேருந்தை வழக்கமாக இயக்கும் ஓட்டுநரால் மட்டுமே இயக்கமுடியும், அவரே ஒருசில முறை பேருந்தை இயக்குவதற்கு மிகவும் சிரமம் படுவார். இன்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்பதால் இந்த பேருந்தை இயக்க ஓட்டுநர் வராததால் இந்த ஓட்டுநரிடம் எதுவும் சொல்லாமல் கொடுத்து அனுப்பிவிட்டு இப்போது பழுதாகி நடுவிலே நின்றுகொண்டு உள்ளது. எப்போதும் இந்த பேருந்து படத்தில் வரும் வடிவேல் காமெடி போன்று “ஆ “தள்ளு’ ,தள்ளு , தள்ளு” என பேருந்தை தள்ளி கொண்டுதான் இருக்கவேண்டி இருக்கு பேருந்து பணிமனையில் பேருந்தை பழுதை பார்ப்பதே இல்லை என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து சென்றார்.