Congress party will participate in the Bharat Bandh today to support the farmers’ protest rahul gandhi to meet farmers


Farmers Protest : விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சி பாரத் பந்தில் கலந்துக்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான  பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு விவசாயிகள் சங்கம் நேற்றைய தினம் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று இன்று நடக்கும் பாரத் பந்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்கிறது.  
காங்கிரஸ் தெரிவிப்பது என்ன?
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிப்ரவரி 15 அன்று விவசாயிகள் அளித்துள்ள பாரத் பந்த் அழைப்பிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் அழைப்புக்கு கட்சி ஆதரவாக இருப்பதாகவும், இன்று  (பிப்ரவரி 16 ஆம் தேதி)  சசரத்தில் விவசாயிகளை ராகுல் காந்தி சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விவசாயிகளின் பாரத் பந்த் அழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். சசரத்தில் ராகுல் காந்தி விவசாயிகளை இரண்டு மணி நேரம் சந்திக்கிறார். விவசாயிகளுடனான அமைச்சர்களின் சந்திப்பு வெறும் நாடகம். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இது வருத்தமளிப்பது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கது. பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் 35வது நாள் இன்று. நாங்கள் ரோஹ்தாஸில் இருக்கிறோம். இன்று அவுரங்காபாத்தில் மெகா பேரணி நடத்தப்படும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021  ஆம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குவதற்கு சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு,  காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.

மேலும் காண

Source link