Nirmala sitharaman after presenting Union budget 2024 says managed the economy with correct intentions


உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
“வளர்ச்சியை பற்றி பேசும் பட்ஜெட்”
ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய திட்டங்களும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார். இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புக்கும் குறைவாக விவசாயத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.21 லட்சம் கோடியாக பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட். எங்களை பொறுத்தவரையில், ஜிடிபி என்றால் நிர்வாகம், வளர்ச்சி மற்றும் செயல்திறனை. நிர்வாத்தை பொறுத்தவரையில், இந்த பட்ஜெட் நமது வளர்ச்சியை பற்றி பேசுகிறது. 
சரியான நோக்கங்கள், சரியான கொள்கைகள் மற்றும் சரியான முடிவுகளுடன் நாங்கள் பொருளாதாரத்தை நிர்வகித்தோம். எனவே இது அக்கறையுடன் கூடிய நிர்வாகம். ஜிடிபியில் D என்பது மக்கள் வாழ்வதை குறிக்கிறது. நல்ல வருமானத்தை ஈட்டுகிறார்கள். எதிர்காலத்திற்கான உயர்ந்த அபிலாஷைகளைக் கொண்டுள்ளார்கள்.
நிதிப்பற்றாக்குறை எவ்வளவு?
ஜிடிபியில் உள்ள ‘P’ அரசின் செயல்திறனை குறிக்கிறது. ஜி20 நாடுகளிலேயே தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 7% வளர்ச்சியை பெற்ற நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியில் பங்கேற்றுள்ளன. 2004 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகையில் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 
முன்மாதிரியான நிர்வாகம், வளர்ச்சி, செயல்திறன், வெற்றிகரமான விநியோகம், பொது நலன் ஆகியவை மூலம் மக்களின் நம்பிக்கை, ஆசீர்வாதம் அரசுக்கு கிடைத்துள்ளது. நல்ல நோக்கத்துடன் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வரவிருக்கும் ஆண்டுகளில் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மேற்கொள்ளப்படும்” என்றார்.
நிதி பற்றாக்குறை குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 5.8%ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு பதிவான 5.9ஐ விட மிகக் குறைவு. அதேபோல், 2024-25 பட்ஜெட்டில், 5.1ஐ நிதிப் பற்றாக்குறையாக குறிப்பிட்டுள்ளோம். 
2021-22 இல், நிதி பற்றாக்குறையை குறைக்க திட்டமிட்டோம். அந்த பாதையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. 2025-26 நிதியாண்டுக்குள் 4.5 சதவிகிதமாகவோ அல்லது அதற்குக் கீழே நிதிப் பற்றாக்குறையை குறைப்போம்” என்றார்.
 

மேலும் காண

Source link