மண்ணை கவ்வும் ரிஷி சுனக்.. திமிறி எழுந்த தொழிலாளர் கட்சி.. பிரிட்டன் கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஷாக்!

பிரிட்டனில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய உள்ளது.

பிரிட்டன் பொதுத் தேர்தல்:

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஆட்சியை பிடித்தாலும் பல சர்ச்சையில் சிக்கி மூன்று பிரதமர்களை மாற்றும் நிலைக்கு கன்சர்வேட்டிவ் கட்சி சென்றது. பாலியல் வழக்கில் சிக்கியவரை அரசாங்கத்தில் நியமித்தது, கொரோனா விதிகளை மீறியது என போரிஸ் ஜான்சனுக்கு எதிராக புகார் எழுந்த நிலையில், தனது பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

போரிஸை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக பதவியேற்ற 6 வாரங்களில் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் பல சவால்களை கடந்து அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை ஓடவிட்ட தொழிலாளர் கட்சி:

பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் வெளியாகியுள்ளது.

யூகோவ் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மொத்தமுள்ள 650 இடங்களில் 403 இடங்களை கைப்பற்றி தொழிலாளர் கட்சி சாதனை படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 155 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், கடந்த 27 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்க போகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டோனி பிளேயர் தலைமையிலான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி 165 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆட்சியை இழப்பதோடு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் இம்முறை தோல்வியை சந்திக்க உள்ளனர் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நிதியமைச்சர் ஜெரோம் ஹன்ட், அறிவியல்துறை அமைச்சர் மைக்கேல் டோனலன், வீட்டு வசதித்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் உள்ளிட்டோர் தோல்வியை சந்திக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கன்சர்வேட்டிவ் குழு தலைவராக பதவி வகித்து வரும் பென்னி மோர்டான்ட், முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் ஆகியோரும் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link