Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

Actress Revathy: மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை  வெளிப்படுத்தக்கூடாது என்கிற நிலை தான் காணப்படுகிறது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்:
அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர். கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
”ஆன்மிக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாதா?”
 அயோத்தி ராமர்  கோயில் கட்டியதற்காக ஒரு தரப்பு பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட சினிமா பிரபலங்களை பலர் விமர்சித்து வருகின்றனர். 
இந்த நிலையில், நடிகை ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராமர் கோயில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளை மறக்க முடியாது. அயோத்தி கோயிலுக்குள் குழந்தை ராமர் வருவதை பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்வு அப்படி இருந்தது.
எனக்குள் உணர்வு ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால்,  இந்துக்களாக இருப்பவர்கள் நமது மத நம்பிக்கைகளை நமக்குள் மட்டுமே வைத்திருக்கிறோம். பிற மத உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது என நினைத்து அப்படி செய்கிறோம்.

மதசார்பற்ற இந்தியாவில், நமது ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற நிலைதான் காணப்படுகிறது. ஸ்ரீராமரின் வருகை, இந்த விஷயத்தை பலரிடம்  மாற்றியுள்ளது.  ராமரின் பக்தர்கள்தான் நாமெல்லாம் என்பதை முதல்முறை நம்பியிருக்கிறோம். ஜெய் ஸ்ரீராம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ரேவதி குறிப்பிட்டுள்ளார்.   இவரது பதவி இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். 

Source link