Parandur new airport TN Govt Notification for land acquisition – TNN


பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport )
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
600-வது நாளை நெருங்கும் போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகாம்பரம் கிராம மக்களின் போராட்டம் 599வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3  மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நில எடுப்பு தொடர்பான மண்டல அலுவலர்களும் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்
இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 ச.மீ., நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாளுக்குள் தெரிவிக்கலாம். விமான நிலைய திட்ட வருவாய் அலுவலருக்கு ஆட்சேபனையை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதியன்று விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது அறிவிப்பு
இந்தநிலையில் காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் உள்ள நிலம் எடுப்பதற்கான மூன்றாவது அறிவிப்பை தமிழ்நாடு அரசு நாளிதழ் மூலம் வெளியிட்டுள்ளது. நிலம் எடுப்பது தொடர்பான கோரிக்கை மற்றும் ஆட்சபனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம் மண்டலம் 1, திம்ம சத்திரம் காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது . குறிப்பிட்ட தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை என்றால், அவை ஏற்றுக் கொள்ள மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் நில எடுப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் நாளை கிராம மக்களின் போராட்டம் 600 ஆவது நாளை எட்ட உள்ளது. தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து அரசு நில எடுப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டிராக்டர் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

மேலும் காண

Source link