Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், I.N.D.I.A. கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி?
நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாவது முறையாக, அதுவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பீகாரில் உள்ள தனது கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு பாட்னாவில் நடைபெற உள்ளது.
பாஜகவிற்கு அமைச்சரவையில் இடம்?
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ் குமார் திரும்புவதன் பின்னணியில் பல கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ”கூட்டணியில் உள்ள ஒவ்வொரு நான்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் விகிதம், பாஜகவிற்கு பதவி வழங்க வேண்டும். மக்களவை தேர்தலின் போது கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறையும் என்றும் கூறப்படுகிறது. 2019ல் நிதிஷ்குமாரின் கட்சி 17ல் போட்டியிட்டு 16 இடங்களை வென்றது. ஆனால் இப்போது 12-15 தொகுதிகள் மட்டுமே நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும்” என்பது போன்ற நிபந்தனைகளை ஏற்றே, பாஜக உடன் மீண்டும் அவர் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் ஆட்சி கலைகிறதா?
நிதிஷ்குமாரின் இந்த கூட்டணி தாவலால் பீகாரில் ஆட்சி கவிழுமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் பீகாரில் சட்டமன்றம் கலைக்கப்படாது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் எப்படியும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எந்தக் கட்சியும் ஆட்சி கலைப்பு நடவடிக்கைக்கு ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. அதேநேரம், அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவை தேர்தல் மீது உடனடியாக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நொறுங்கும் INDIA கூட்டணி:
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னிற்கு மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் வெளிப்பாடாகவே, I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியபோதும் கூட, அதனை ஏற்க மறுத்தார். இந்நிலையில் தான் அவர் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவில் இணையப் போவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாபில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது. இந்நிலையில் நிதிஷ்குமாரும் கூட்டணி மாற்றம், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.