actor prakash raj codemns p m modi comment on congress muslims manmohan singh | Prakashraj


பிரதமர் நரேந்திர மோடியின் பருப்பு தமிழ்நாடு, கர்நாடகாவில் வேகாது, அவரின் பேச்சுக்கள் என்பது, நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் என நடிகர் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சர்ச்சைப் பேச்சு
18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்து ஏப்.26, மே 7, 13, 25, ஜூன் 1 என மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், லக்னோ, சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி கடந்த சில நாள்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பரப்புரையின்போது, இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் நாட்டின் சொத்தில் முதல் உரிமை தந்ததாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு இவ்வாறு சொன்னதாகவும், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சட்டத்தை மாற்றி பெண்களின் நகை, மக்களின் சொத்துகளைப் பறித்துக்கொள்ளப் போகிறார்கள், கம்யூனிஸ்டுகள் நாட்டை நாசமாக்கியுள்ளனர் என்றும் பிரதமர் மோடி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
மேலும் முன்னதாக ராஜஸ்தானில் பரப்புரை மேற்கொள்ளும்போது இந்த நாட்டில் அதிகம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என இஸ்லாமியர்களை மறைமுகமாகத் தாக்கி பிரதமர் மோடி பேசியது கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 
மன்மோகன் சிங் பேசியது..
விவசாயம், நீர்ப்பாசனம், நீர்வளம், சுகாதாரம், கல்வி என திட்டங்களை வகுக்கும்போது, பட்டியல் இனத்தவர், பழங்குடி வகுப்பு மக்கள், ஓபிசியினர், சிறுபான்மை மக்கள், குழந்தைகள், பெண்கள், இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர் மேம்பாட்டிற்காக வகுக்க வேண்டும், வளர்ச்சியில் சம பங்கினை சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வழங்க உறுதிசெய்ய புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2006ஆம் ஆண்டு பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி அவரது கருத்தை இவ்வாறு பேசியிருப்பது கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
‘தமிழ்நாட்டில் பருப்பு வேகாது’
இந்நிலையில் நடிகரும் ஆளும் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து தன் கருத்துகளை அழுத்தமாக பகிர்ந்து வருபவருமான பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை கடுமையாக  விமர்சித்துள்ளார். ”மல்லிப்பூவுக்குள் இருக்கும் மணம் தானே வெளியே வரும்?  மன்னருடைய அசிங்கம் அவருடைய பேச்சில் இருந்து வெளியே வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை, முஸ்லிம் இனத்தைக் குறிப்பிட்டு மோடி பேசுகிறார். இதிலேயே அவரது குறிக்கோள் தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும்போது இந்த வார்த்தையை அவர் பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்தப் பருப்பு இங்கே வேகாது, ஆனால் உ.பியில் வேகும். ஒரு நாளைக்கு 5 வேடங்கள், ஒரு நாடு, ஒரு தர்மம், ஒரு மொழி என்று சொல்லும் மன்னருக்கு இரண்டு நாக்கு. இது நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம். மக்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என விமர்சித்துள்ளார்
‘மக்கள்தான் ஜெயிப்பார்கள்’
திருடனைப் பற்றி இன்னொரு திருடனிடம் எப்படி புகார் தர முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு யாராவது புகார் தர வேண்டுமா? ராமரை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் மறுபடி இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தால் எதுவுமே நடக்காது. எவனும் இருக்கக்கூடாது, எதிர்க்கட்சி இருக்கக்கூடாது. யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
மக்கள் கூட அவ்வப்போது அறியாமையில் ஓட்டு போடுவார்கள். கர்நாடகாதான் இந்த முறை மாநிலத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது. கடைசியில் தேர்தலில் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள்தான். அவர்களுடைய வாழ்க்கைதான். தென் இந்தியா நிச்சயம் இந்த முறை, பாஜகவுக்கும், இந்த மன்னருக்கும் என்ன சொல்ல வேண்டுமோ? அதை சொல்லும்” எனப் பேசியுள்ளார். 

மேலும் காண

Source link