vidharth poorna mysskin starrer devil movie review


டெவில் 

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். டெவில் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கதை

அலெக்ஸ் (விதார்த்) மற்றும் ஹேமா ( பூர்ணா) ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தனது திருமண வாழ்க்கையை பலவித ஆசைகளுடன் தொடங்குகிறார் ஹேமா. ஆனால் அலெக்ஸ் தனது அலுவலகத்தில் இருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார். அவர் மீது இருக்கும் ஈர்ப்பால் ஹேமாவை திருமண வாழ்க்கையில் புறந்தள்ளியபடி இருக்கிறார். இந்த உண்மை ஒரு நாள் ஹேமாவுக்குத் தெரிய வர அவர் மனமுடைந்து போகிறார். எதிர்பாராத விதமாக அவருக்கும் ரோஷன் என்கிற ஒருவருக்கும் இடையில் நட்பு ஏற்படுகிறது. தனது கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பு ரோஷனிடம் இருந்து ஹேமாவுக்கு கிடைக்கிறது. நட்பு சிறிது சிறிதாக காதலாக மாறுகிறது. இந்த உறவு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் தருணத்தில் தான் உறவில் இருந்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி ஹேமாவிடம் மன்னிப்பு கேட்டு தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறான் அலெக்ஸ்.
ரோஷனுக்கு நிலைமையை எடுத்துச்சொல்லி அவருடனான எல்லா தொடர்புகளையும் முடித்துக் கொள்கிறார் ஹேமா. ரோஷன் திரும்பி ஹேமாவின் வாழ்க்கையில் வருவதால் ஏற்படும் விபரீதங்கள் எல்லாம் தான் மீதிப்படம்.
எழுத்தாளர் தேவிபாரதியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது டெவில். மோகம் , குரோதம், நிராசைகள் என  ஒவ்வொரு மனிதருக்கு உள்ளும் ஒளிந்திருக்கும் டெவில்,  எந்த வித களங்கமும் இல்லாத ஒரு நபர் என இரு வேறு துருவங்களை எதிரெதிர் முனைகளில் நிறுத்தும் ஒரு நாடகமாகவே இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் சராசரியான ஒரு திரைக்கதையாக இருக்கும் டெவில் இரண்டாம் பாதியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக செல்கிறது. த்ரில்லர் ஜானர் படம் என்றாலும் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
விமர்சனம்
டெவில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதல் பல்வேறு மீம்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. திருமணத்திற்கு பின் இன்னொருவருடனான உறவு என ஆதரித்தும் விமர்சித்தும் பதிவுகளை காண முடிந்தது. முன்முடிவுகளுடன் எந்த கதாபாத்திரத்தின் சார்பையும் இயக்குநர் எடுக்கவில்லை. ஒரு இக்கட்டான சூழலில் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதத்தை மட்டுமே காட்டுகிறார்.
நடிகர் விதார்த் , பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு  ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளார்கள். இருளில் எடுக்கப்பட்ட காட்சிகளை கார்த்திக் முத்துக்குமார் சிறப்பாக கையாண்டிருக்கிறார். மிஷ்கின் பின்னணி இசை படத்திற்கு ஒரு தனித்துவமான மூட் கொடுக்கிறது. 
அதேநேரம்  படத்தின் கதை தொடங்கிய நொடியில் இருந்தே மிஷ்கின் தன் போக்கில் செல்லோவையும் வயலினையும் இசைத்துக்கொண்டே இருப்பது சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  பாடல்கள் பெரியளவில் நம்மை கவராமல் மிகைப்படுத்துவதாகவே அமைகின்றன. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் பழைய அம்மன் படத்தில் வருவதுபோல் பாடல் வேறு இடம்பெற்றிருக்கிறது.
எழுத்து ரீதியாக கதைக்கு பெரிய பலம் இருந்தாலும் டைரக்‌ஷனில் மிஷ்கினின் தாக்கம் அதிகம் இருக்கிறது. நிச்சயம் டெவில் படத்தில் நாம் கவனிக்க சில நல்ல தருணங்கள் இருக்கின்றன, ஆனால் அவற்றைத் தாண்டி நிறைய குறைகளும் இருக்கின்றன.

மேலும் காண

Source link