திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் 6 ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செயதுள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் வருந்தி, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்கு சென்று விடலாமா என யோசித்து வருவதாக கூறுகிறார்.

பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இஸ்ரேல் சென்று வந்த அவர் அங்கு பயிரிடுவது போல் தக்காளியையும் கத்தரிக்காயையும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிரிட்டுள்ளார். அவருடைய காய்கறி தோட்டம் சுமார் 6 ஏக்கரில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருந்தது.

இஸ்ரேல் விவசாய முறைப்படி சுண்டைக்காய் தண்டில் கத்திரிக்காயையும் கத்தரிக்காய் தண்டில் தக்காளியை ஒட்டு ரகமாக சாகுபடி செய்துள்ளார். சாதாரண நாற்றுகள் ஆறு மாதங்கள் வரை மட்டுமே விளைச்சல் கொடுக்கும் நிலையில் இது போன்ற ஒட்டு ரகம் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை விளைச்சல் கொடுக்கும் என்கிறார் சீனிவாசன்.

தக்காளியும் கத்தரிக்காயும் நல்ல விளைச்சல் கொடுத்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் அவர். ஒட்டு ரக கத்தரிக்காய் ஒரு நாற்று 8 ரூபாய் என்கிற வாங்கி வந்து பயிரிட்டு அதனை பராமரிப்பதற்காக வாரத்திற்கு 15000 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறும் அவர் ஒட்டுமொத்தமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாக கூறுகிறார்.

ஆனால் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் 12 ரூபாய் என்றே கொள்முதல் செய்யப்படுவதாக கூறுகிறார். தன்னிடமிருந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி செல்லும் வியாபாரிகள் கிலோ 40 ரூபாய் முதல் 60 பாய் வரை விற்பனை செய்கின்றனர் என்றும் கூறுகிறார்.

ஆசை ஆசையாய் பயிர் சாகுபடி செய்ததாக கூறும் அவர் உரிய விலை கிடைக்காத காரணத்தினால் கூலி வேலைக்கு சென்று விடலாம் போல இருப்பதாக கூறுகிறார். விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports