TNPSC Group 2 2A Mains Result Is Out Tomorrow Jan 12 Good News Know More Details | Group 2 Result: நீண்ட எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்

அரசுத் துறைகளில் 6,151 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 2 போட்டித் தேர்வின் முடிவுகள் நாளை (ஜனவரி 12) வெளியாக உள்ளன.
அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் 5,446 காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை, நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர்.
மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கின. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
நீண்ட காத்திருப்பு
இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் உடனடியாக ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. 
முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. 
தொடர்ந்த தாமதம்
முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். அதேபோல டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். ஆண்டுக்கணக்கில் தாமதம் ஏற்பட்டு வருவதால், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு
குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள், 6,231 ஆக உயர்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள் 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவித்தது. இதன்படி 161 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,990 பதவிகளுக்கும் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
இந்தத் தேர்வு முடிவுகள் நாளை (ஜன.12) வெளியாக உள்ளன. இதை அறிந்துகொள்வது எப்படி?
* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் தேர்வு முடிவுகள் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
* அதில், பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/ 

Source link