cm mkstalin will lay the foundation stone for the new project worth rupees 732 crore today | CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்


 CM Stalin: பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டி டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் விழா:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார்.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதிய கட்டிடங்களை திறந்து வைக்கும் முதலமைச்சர்:
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். 
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டிடம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (IT Tower),
வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 3 கோடியே 62 இலட்சம்ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா என மொத்தம் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு துறைக் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மருத்துவ உபகரணங்கள்:
இறுதியாக, இன்போசிஸ் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்குகிறார்.

மேலும் காண

Source link