tn cm mk stalin has stated that people will always stand with dmk party and not with bjp | TN CM Stalin: தேர்தல் நேரம் என்பதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார்


மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியப்பின் பேருரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ” டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மயிலாடுதுறை காவிரியால் செழிப்போடு இருக்கிறது. புதிய மாவட்டத்தை அறிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்துவதே முக்கியம். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.655 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அறிவிப்புகளை அமல்படுத்துவது மட்டுமல்லாமல் அதனை அரசாணையாக்கி, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற பட்டாக்களை கணினி மூலம் வழங்குவது இதுவே முதல்முறை. 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 2 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள். தமிழ்நாடு வெள்ளத்தால் பாதித்த போது 1 ரூபாய் கூட தராதவற்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். திராவிட மாடல் அரசு பக்கம் தான் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்” என பேசியுள்ளார்.
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பகுதியில், 13 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. புதிய கட்டிடம் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் 700 படுக்கைகளுடன் ரூ.254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை, மயிலாடுதுறையில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.  

மேலும் காண

Source link