Lok Sabha Election 2024 152 Flying Squad Deployed To Stop Money Laundering In Tiruvannamalai District

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில்  பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க  திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எண்.11.திருவண்ணாமலை மற்றும் எண்.12.ஆரணி ஆகிய இரு பாராளுமன்ற தொகுதிகளுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை  மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1500க்கும் மேலாக  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டு பிடிக்கப்பட்டு  வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு  போடப்பட  உள்ளனர்.

 
பறக்கும் படை சோதனை
வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க திருவண்ணாமலை  மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
152 பறக்கும் படைகள் அமைப்பு
பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு தேர்தல் விதியினை மீறி செய்யப்படும் பணப்பட்டுவாடாவினை கண்காணிக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை (Flying Squad Team) நிலைக்கண்காணிப்புக்குழு ((Static Surveillance Team) மற்றும் காணொளி கண்காணிப்புக்குழு (Video Surveillance Team) உள்ளிட்ட 152 குழுக்கள் நியமிக்கப்பட்டு இக்குழுக்கள் பயன்படுத்த ஏதுவாக அனைத்து வாகனங்களுக்கும் தேர்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு GPS கருவி பொருத்தி தயார்நிலையில் இருந்த மேற்படி வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏறப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயின்டில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செல்பி எடுத்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர்மரு.மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கோ.குமரன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Source link