Ram Lalla is a five year old child Ayodhya Ram Mandir to remain shut for an hour daily | Ayodhya Ram Temple: அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்! அறக்கட்டளை எடுத்த திடீர் முடிவு


Ayodhya Ram Temple: அயோத்தி ராமர்  கோயில் இன்று முதல்  தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அயோத்தி ராமர் கோயில்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது.
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
“ஒரு மணி நேரம் கோயில் நடை மூடப்படும்”
இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கில் வருவாயும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் நடை ஒரு மணி நேரம் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ”அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராம் லல்லா 5 வயது குழந்தையாக இருக்கிறார். 5 வயது ராம் லல்லாவால் தொடர்ந்து 18 மணி நேரம் கண்விழித்து இருக்க முடியாது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது.
அதனால், சிறிது நேரம் அவர் ஓய்வு  அளிக்கும் வகையில் கோயில் நடை ஒரு மணி நேரம் மூடப்பட்டிருக்கும். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராம் லல்லா ஓய்வு எடுப்பார். அந்த நேரத்தில் கோயில் நடை மூடப்படும்” என்று  தெரிவித்துள்ளார்.  அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் தரிசனம் அதிகரித்ததால், தரிசன நேரத்தை கோயில் நிர்வாகம் நீடித்துள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 4 மணி முதல் பக்தர்கள்  தரிசனக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மேலும் காண

Source link