வேன் மீது லாரி மோதி விபத்து! 7 பெண்கள் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓனான் குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென பஞ்சராகி நின்றுள்ளது. இந்நிலையில் வேனை சாலையில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அதே சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி அந்த வேன் மீது மோதியது.

இதில் 7 பெண்கள் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பேரை மீட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுற்றுலா சென்று திரும்பும் பொழுது ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஓனான் குட்டை கிராமத்தை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.