Telangana Governor Tamilizha Soundararajan Said I Am The Only One Who Has The Honor Of Hoisting The National Flag In Two States | இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை எனக்கு மட்டும்தான்

மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று நாடார் மஹாஜன சங்கம் சார்பில் 72வது மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இங்கு நான் ஆளுநராக வந்திருக்கிறேன் என்பதை சொல்வதை விட, உங்களின் சகோதரியாக வந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஆளுநர் என்பதால் என் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விடும். ஆளுநர் நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக ஒப்புதல் கொடுக்க முடியாது. முதலில் என் அலுவலகத்திற்கு கோரிக்கை வைக்கப்படும். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், ராஜ்பவனில் உள்ள உயர் அதிகாரிகள் கூடி முடிவு எடுத்துவிட்டு போகலாமா, வேண்டாமா என்று அறிவிப்பார்கள். எந்த நிகழ்ச்சியிலும் நான் நேரடியாக வருகிறேன் என்று ஒப்பு கொள்ள முடியாது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் யாரிடம் கேட்காமல் வருகிறேன் என்று ஒப்பு கொண்டேன். 
குடியரசு தின விழாவில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை உங்கள் சகோதரியாகிய நான்தான். காலையில் தெலங்கானாவில் கொடியேற்றிவிட்டு, விமானத்தின் மூலம் புதுச்சேரி சென்று அங்கு கொடியேற்றிவிட்டு அதன்பின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அழைத்து அட் ஹோம் நிகழ்ச்சியில் தேநீர் விருந்து கொடுக்க வேண்டும். அந்த தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றே சொல்வதை கூட ஒரு சில கட்சிகள் பெருமையாக சொல்லி கொள்கின்றனர். தெலங்கானாவில் கொடியேற்றிவிட்டு புதுவை வந்து அங்குள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாலை 4 மணிக்கு தேநீர் விருந்து கொடுத்துவிட்டு, மீண்டும் தெலங்கானாவில் அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்தேன். அதனை தொடர்ந்து, இன்று காலை தெலங்கானாவில் இரண்டு மாநாடுகளில் கலந்துகொண்டு, மாலை உங்களுக்கான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 
ஆகவே, இரண்டு மாநிலத்தின் கொடியேற்றியது மட்டுமல்ல, இரண்டு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து விருந்து அளித்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் உங்கள் சகோதரியாகிய நான் மட்டும்தான். ஏனென்றால், இதற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக தெலுங்கானா முதலமைச்சர் வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இரண்டு மாநிலங்களிலும் தேநீர் விருந்து கொடுத்தேன். 
ஒரு அழைப்பு என்று வந்தால் அவர் எதிரியாக இருந்தாலும், வேறு கொள்கை உடையவர்களாக இருந்தாலும் மரியாதையுடன் கலந்துகொண்டு ஏற்றுகொள்ள வேண்டும். அந்த அன்பை பகிரும் குணம்தான் தமிழர் குணம், அதைதான் நமக்கு காமராஜரும் சொல்லி கொடுத்தார். 
தெலங்கானா ஆளுநராக என்னை நியமித்தபோது அதிகபடியான விமர்சனம் வந்தது. அனுபவம் இல்லாத ஆளுநர் எப்படி ஒரு புதிய மாநிலத்திற்கு ஆளுநராக செயல்படுவார் என்று. நான் நன்கு படித்தவர், அதுவும் டாக்டருக்கு படித்தவர். அதனால், புதிதாக பிறந்த தெலங்கானா குழந்தையை பத்திரமான பார்த்து கொண்டேன். 
யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், ஆனால் ஓட்டு போடுங்கள். நேற்று கூட நான் பேசினேன் சர்வாதிகாரத்திற்கு ஜனநாயகத்தில் இடமில்லை, அன்பிற்கு மட்டுமே இடமும் உண்டு. அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி என்னை துணை நிலை ஆளுநராக நியமித்தார். அப்போது என்னை விமர்சித்தார்கள், ஒரு டாக்டருக்கு ஒரு குழந்தை மட்டுமல்ல, இரட்டை குழந்தை பிறந்தாலும் பாதுகொள்ள தெரியும். அதுபோல, ஒரு டாக்டர் படித்த ஆளுநராகிய என்னால், இரண்டு மாநிலங்களையும் பார்த்துகொள்ள முடிந்தது.” என பேசினார். 

Source link