விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், முன்னதாக இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளைக் குவித்தது.
இந்நிலையில் தனியார் ஊடகத்தின் நிகழ்வில் விடுதலை திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசினார்.
“இது வெற்றிமாறன் படம் அல்ல, இது எங்கள் படம். இவ்வளவு போர்க்களமான சூழல், அதில் என் தம்பி விஜய் சேதுபதி கதாபாத்திரம்.. நான் தான் அது. நீ அப்போ தாடி வைக்கல இப்போ தாடி வச்சு இருக்க என என்னுடன் சண்டை போட்டான்.
“இப்படி கால் மேல் கால் போட்டால் தான் என்னுடன் பேசுவியா?” எனக் கேட்பான். வலி தோய்ந்தவனுக்கு தான் அது தெரியும். இது கற்பனை அல்ல ஆங்காங்கே நடந்த சம்பவங்கள். என் தம்பி, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுன துணைவன் அப்படிங்கற சிறுகதைய தழுவி எடுத்தான்னு ஜெயமோகனே ஒத்துக்க மாட்டாரு. அவனுக்கு இது மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என உந்துதல் தந்து இருக்கலாம், தம்பி சூரி, தங்கை பவானி இந்தப் படத்தில் ஆற்றியது பெரும் பங்கு.
போர்க்களம் மாதிரி ஒரு கதைக்களத்தில் காதல எடுத்திருக்கான். என் அப்பா இளையராஜாவுக்கு 82 வயசு. அந்த இடத்தில் எப்படி இசை அமைத்துள்ளார்! என் தம்பி மாண்டேஜஸ் ஆக இந்தக் காட்சியை எடுத்துள்ளேன். வளையலைக் காட்டும் அந்தக் காட்சியை போல் ஒரு கவிதையை யாரும் எழுத முடியாது. எனக்கு பாட்டு எடுக்க வராது என வெற்றிமாறன் கூறுவான், ஆனால் அவனை போல் யாருக்கும் பாடல் எடுக்க வராது.
இந்தப் படம் எங்கள் வாழ்வியலுடன் ஒத்துப்போகக் கூடிய படைப்பு. வட சென்னையில் இரண்டாவது பாகம் எனக் கூறி ஏமாற்றிவிட்டான். ஆனால் இதில் வசமாக சிக்கி விட்டான். விடுதலையில் தப்பிக்க முடியாது. முதல் பாகத்தை விட 4 மடங்கு சிறப்பாக விடுதலை இரண்டாம் பாகம் இருக்கப்போகிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் என்ன மாதிரியான எதிர்பார்ப்பைக் கொடுக்குமா அந்த மாதிரியான எதிர்பார்ப்பை என் தம்பி சூரி நடித்து வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ஏற்படுத்தியுள்ளது” எனப் பேசியுள்ளார்.
மேலும் காண